கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கோவையில் கொரோனாவிற்கு சிறப்பான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். கோவையில் கொரோனா பாதித்த 1609 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 806 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும் கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 69 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது எனவும், சென்னைக்கு அடுத்து கோவையில் அதிக கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்படுகிறது எனவும் கூறிய அவர், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். கோவையில் நோய் தொற்றை கண்டறிய காய்ச்சல் முகாம் அதிகரிக்கப்படும் எனவும், கொரோனா வைரஸ் தான் நமக்கு எதிரி. நோயாளிகள் எதிரிகள் அல்ல எனவும் அவர் தெரிவித்தார். கோவையில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனைகள் செய்ய முடியும் எனவும், எந்த சூழலையும் எதிர்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது எனவும் அவர் கூறினார்.
கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4 ஆயிரத்து 650 படுக்கை வசதிகள் உள்ளது எனவும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 500 படுக்கைகள் அதிகரிக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலை கழகம் கொரோனாவிற்கு மருந்து கண்டறிந்து இருப்பது நம்பிக்கை தரும் செய்தி எனவும், விரைவில் கொரோனாவிற்கு மருந்து வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கோவையிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சித்தா மருத்துவத்தின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் இல்லை எனவும், கொரோனா நோய் பரவலை கணிக்க முடியாத நிலை உலகம் முழுவதும் உள்ளது எனவும் அவர் கூறினார். கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க இதர நோய்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே காரணம் எனவும், இதனால் மக்கள் பயப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்
இதையடுத்து பேட்டியளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் கொரோனா பாதித்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும், விமானம் மூலம் கோவை வருபவர்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.