சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று காலை 6.30 மணிக்கு மஸ்கட்டில் இருந்து 284 பயணிகளுடன் வந்த விமானம் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.
அதேபோல் ஐதராபாத்தில் காலை 6.55 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னைக்கு 182 பயணிகளுடன் வந்த விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டு இருந்தது. அதன் பிறகும் தரையிறங்க முடியாததால் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. காலை 7.25 மணிக்கு 132 பயணிகளுடன் புனேவில் இருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
மேலும் ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், மலேசியாவில் இருந்தும் வந்த 7 விமானங்கள், சென்னையில் நிலவிய பனிமூட்டத்தால் வானில் நீண்டநேரமாக வட்டமடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின.
இதே போல் சென்னையில் இருந்து புறப்படும் ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, மதுரை, மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. வெயில் அடிக்க தொடங்கிய பிறகு பனிமூட்டம் விலகியதும் மீண்டும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.