கர்ச்சீப் அளவிற்கு ஷீட்களாக மாற்றப்பட்டு கடத்தி வரப்பட்ட, 1.45 கிலோ எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து ஏற்கனவே சென்னை வந்திருந்த பயணி ஒருவரின் உடைமைகள்
இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமானம் வழியாக இன்று சென்னை வந்துள்ளது. அதில், நான்கு அட்டைப்பெட்டிகள், தனியாக அவருக்கு unaccompanied baggage ஆக அனுப்பப்பட்டிருந்தது. அதில் தங்கம் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அட்டைப்பெட்டியில் பொம்மைகளும் படுக்கை விரிப்புகளும் போன்ற பொருட்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பெட்டிகள் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து, அட்டைத் தாளைக் கிழித்தபோது, அட்டையில் இரண்டு அடுக்குகளை மத்தியில் கார்பன் பேப்பரில் சுற்றப்பட்ட தங்க ஷீட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
“இது போன்று தனியாக பயணிகளுக்கு வரும் சாமன்களில் இருந்து தங்கத் ஷீட்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும், இது முன்னர் பயணிகளுடன் வரும் சாமான்களில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பார்த்தோம். ஆனால் புதுமையான வழியில் கடத்தல் நடைபெற்றுள்ளது. தங்க ஷீட்கள் கார்பனால் சுற்றப்பட்டிருந்ததால், அதனை கண்டறிவது கடினம். தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் விலை சுமார் 78 லட்சத்து 40 ஆயிரம் எனவும், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.