தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தோடு தமிழ் நெட் திட்டத்தையும் இணைத்து செயல்படுத்துவதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
1815 கோடி செலவில் தமிழகத்தில் உள்ள 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இணைய வசதி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தானது.*சென்னை தலைமை செயலகத்தில் பாரத்நெட் இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்துவதற்கான முதன்மை சேவை ஒப்பந்தம் தமிழ்நாடு இழை வலையமைப்பு நிறுவனம்,தமிழ்நாட்டில் திட்டத்தை செயல்படுத்தவுள்ள திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் L&T,ITI மற்றும் becil ஆகிய நிறுவனங்களுடன் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல்,தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் திட்டத்தை செயல்படுத்தவுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்:பாரத் நெட் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அனைவரும் இன்டர்நெட் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்,இத்திட்டம் 1815.32 கோடி செலவில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் குறைந்தபட்சம் 1Gps அளவிலான அலைகற்றை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் பாரத் நெட் திட்டம் தமிழகத்தில் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட உள்ளது என்றும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள காரணத்தால் தற்போது துவங்கபடாமல் உள்ளது.மூன்றாம் மற்றும் நானகாம் கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட உள்ளது.
மூன்றாம் கட்ட பணிகள் மூலம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை,நாமக்கல்,கரூர்,கோவை,திருப்பூர்,திருச்சி மாவட்டங்களில் உள்ள 3326 கிராமங்களுக்கும் நான்காம் கட்ட பணிகள் மூலம் கன்னியாகுமரி,மதுரை இராமநாதபுரம்,தேனி,தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி,விருதுநகர்,திண்டுக்கல்,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்டர்நெட் வசதி வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே துவங்கப்பட்ட தமிழ் நெட் திட்டத்தை பாரத் நெட்டுடன் சேர்த்து செயல்படுத்த வரைவு திட்டம் இருப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.மேலும் தென்மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.