சதுரங்க வேட்டை படத்தில் வருவது போன்று குறைந்த முதலீட்டுக்கு நிறைய லாபம் என்பதை நம்பி, பிரபல நடிகர் கோடிக்கணக்கில் பணம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீமையிலே, பசும்பொன் போன்ற படங்களில் நடித்து கவனமீர்த்தவர் விக்னேஷ். தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார். இரிடியம் தொழிலை நம்பி ரூ. 1. 89 லட்சம் பணத்தை பறிகொடுத்துவிட்டதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் போலீசில் அளித்துள்ள புகாரில், கிண்டி தொழிற்பேட்டையில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார் விக்னேஷ். அங்கு வாடிக்கையாளராக வந்த ராம் பிரபு என்பவர் இரிடியம் தொழிலில் முதலீடு செய்யமாறும் விக்னேஷிடம் பேசியுள்ளார்.
ரூ. 5 கோடி முதலீடு செய்தால் ரூ. 500 கோடி வரை லாபம் பெறலாம் என்று ராம் பிரபு கூறியதில் மயங்கிய விக்னேஷ், அவரிடம் சிறுக சிறுக ரூ. 1. 80 கோடி பணம் கொடுத்துள்ளார். அதற்கான ஆவணத்தையும் பதிந்துகொண்டுள்ளார்.
ஆனால் சொன்னபடி ராம் பிரபு பணத்தை தரவில்லை. வாங்கிய பணத்துக்கு வட்டியும் தரவில்லை. பணத்தை திருப்பி தருமாறு விக்னேஷ் கேட்டதற்கு, அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விக்னேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தற்போது இப்புகார் சென்னை மத்திய குற்றிப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளார். எனினும், இதுவரை இந்த மோசடி சம்பவம் தொடர்பாக காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.