கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தடை விதிக்கப்பட்ட பொதுப்போக்குவரத்து, 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் அதனை சேவையினை மீண்டும் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கி விட்டன. குறிப்பாக பொதுப்போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டதால், எந்த பணிகளுக்கும் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்களில் மேலும் பல தளர்வுகளை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் கடந்த 5 மாதங்களாக முடங்கி கிடந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.
பொதுப்போக்குவரத்து சேவையில் திருப்தி இல்லை என மக்கள் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து சேவை என்பது பல மாதங்களுக்கு பிறகு துவங்கப்பட்டாலும், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்பதால் இதில் எந்த வித பலனும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகளவில் எழுந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலிருந்து தேனி செல்ல வேண்டும் என்றால் மதுரை மாவட்ட எல்லையில் இறங்கி விட்டு பின்பு அங்கிருந்து தேனி எல்லையை நோக்கி நடந்து சென்று மற்றொரு பேருந்தினை பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. அருகாமையில் உள்ள மாவட்டம் என்பதால் ஏதோ வேறு வழியின்றி சென்று விடலாம். ஆனால் சென்னைப்போன்ற மாவட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்? அரசுப்பேருந்துகளை நம்பியுள்ள மக்கள் பலர் இருக்கும் நிலையில், இதுப்போன்ற கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்திருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம் என்றாலும், மாவட்டத்திற்குள் மட்டும் இயங்க அனுமதித்திருப்பது முட்டாள் தனமாக விஷயம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அனைத்து மாவட்டங்களுக்கும் முறையான கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மக்கள் முன்வைக்கின்றனர்.
இதற்கிடையில் தான் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகளை இயக்கினால் எந்தவித பலனும் இல்லை. எனவே மற்ற மாவட்டங்களுக்கு சென்று வரவும், அதில் 100 சதவீத பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்ல அனுமதி வழங்கும் வரை தனியார் பேருந்துகள் தமிழகத்தில் செயல்படாது என தெரிவித்துள்ளனர்.