மசினகுடியில் நேற்று உயிரிழந்த காட்டு யானையை தீ அல்லது ஆசிட் போன்ற திரவத்தால் கொடூரமாக தாக்கியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அந்த யானை மீண்டும் தாக்கப்பட்டதில் அதன் இடது காது கிழிந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த யானையை வனத்துறையினர் மீது முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு அழைத்து செல்லும்போது யானை உயிரிழந்தது.
Read more – 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ராணுவ பயிற்சியா ? இலங்கை அரசு புதிய திட்டம்
இந்தநிலையில், இன்று காலை சுமார் 9 மணி அளவில் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி, யானையின் காதில் யாரோ பெட்ரோல் ஊற்றி எரித்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. மேலும்,அந்த யானை மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அந்த யானையின் காது பகுதி தீயினால் வெந்து துடிதுடித்து இறந்துள்ளதாகவும், மேலும் அந்த யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறி உள்ளது என்றும் மருத்துவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீலகிரி பகுதி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.