தேர்வுக் கட்டணம் செலுத்தாத 50 சதவீத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுக்கு, இறுதியாண்டு மாணவர்கள் நீங்கலாக சுமார் 2.30 லட்சம் பொறியியல் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பை தொடர்ந்து மாணவர்களுக்கான மதிப்பெண்களை தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில், அவர்களுக்கான தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். இதனிடையே, வெளியான தேர்வு முடிவுகளில், தேர்வுக் கட்டணம் செலுத்தாத கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பெயர்கள் இடம்பெறாதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மார்ச் 17 முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், சில கல்லூரிகளால் மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணத்தை வசூல் செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. கட்டணம் செலுத்தாத கல்லூரிகளில் பயிலும் 50 சதவீத மாணவர்களின் முடிவுகளை மட்டும் நிறுத்தி வைத்துள்ளதாகவும், கல்லூரிகள் கட்டணத்தை உடனே செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.