தமிழக அரசு வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பா.ஜ.க. வேல் யாத்திரையை தொடங்கியுள்ளது.
தமிழக பா.ஜ.க.வினர் நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை, ஒரு மாத காலம் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை உள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கு யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த தமிழக அரசு, கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், யாத்திரையை நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது.
பரபரப்பான இந்த சூழலில், தடையையும் மீறி பா.ஜ.க. வேல் யாத்திரையை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக யாத்திரை நடைபெறும் மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ.க.வை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடவுள் முருகனை வழிபடுவது எனது அடிப்படை உரிமை எனவும், அதன் அடிப்படையில் எனக்கு விருப்பமான முருகனை வழிபட திருத்தணிக்கு செல்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே கோவிலுக்கு செல்வதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பின்னர், கையில் வேலுடன் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருத்தணிக்கு அவர் காரில் புறப்பட்டார். அவருடன் பா.ஜ.க.வை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் திருத்தணிக்கு புறப்பட்டனர். இதனிடையே திருத்தணியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனா்.