தமிழகத்தில், ஆகஸ்ட், 1 முதல், பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 25 முதல், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில், சில நாட்கள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்பின், கொரோனா நோய் தொற்று அதிகரித்ததும், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி, அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன
தற்போது பொது ஊரடங்கு, 31ம் தேதி நிறைவுபெறும் நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என, அரசு ஆலோசித்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்படா விட்டாலும், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து துவக்கப்படுமா என்ற அதீத எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பொது போக்குவரத்து அனுமதிக்காத நிலையிலேயே, அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை சில நாட்களாக அதிகரித்து வருகிறது
பொதுப் போக்குவரத்தை அனுமதித்தால், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரிக்கும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, ஆக., 1 முதல், பஸ், ரயில் போக்குவரத்து இயங்குவதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக, மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்களை இயக்கலாம் என, சில அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது, விரைவில் தெரியவரும்.