ஆரஞ்சுக்கு பதிலாக கறுப்பு நிறத்தில் கேரட் விவசாயம் செய்து வருகிறார் கொடைக்கானலில் விவசாயி ஒருவர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியை சேர்ந்த ஆசீர் மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகின்றார். ஆன் லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகளை வாங்கி அவரது தோட்டத்தில் விவசாயம் செய்துள்ளார். பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் தான் நாம் கேரட்டை பார்த்திருக்கிறோம் ஆனால் இது கருப்பு நிறத்தில் இருப்பது பார்வைக்கு சற்று விநோதமாக உள்ளது.
மற்ற கேரட்டை போலவே இந்த கருப்பு கேரட் 90 நாட்கள் விவசாயமாகவும், இந்த கருப்பு கேரட் சீனாவை பூர்விகமாக கொண்டு சீனா மற்றும் இந்தியாவில் கருப்பு கேரட் பயிரிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கருப்பு கேரட்டில் சுவை அதிகமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், அறிவாற்றலை அதிகரித்தல், செரிமானத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட சில முக்கிய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தனை நன்மைகளை உள்ளடக்கிய இந்த அபூர்வ வகையை சேர்ந்த கருப்பு கேரட்டை விவசாயம் செய்து அசத்தியுள்ளார் விவசாயி ஆசீர்.கருப்பு நிறத்திலான கேரட்டை அருகில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்,