சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவக் கழிவுகள், பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உலக மக்களின் வாழ்வை முடக்கிப் போட்டுள்ள உயிர்க் கொல்லியான கொரோனா வைரசால், இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட, நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனிடையே, நோய்த்தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன்படி, கொரோனா முன்னெச்சரிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, நந்தனம் பகுதியில் சார்மியர்ஸ் சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள அப்பகுதி மக்கள்: மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க், பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைகள் போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல், அந்த கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையில் முன்புற வாயிலை பயன்படுத்துவதை தவிர்த்து, அதன் பின்புற வாயிலாகவே ஆம்புலன்சுகள் அனுமதிக்கப்படுவதகாவும், திறந்த வெளியில் தங்களது குடியிருப்பு பகுதிகளுக்கு முன்பாகவே கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை போட்டு வைத்து, ஆம்புலன்சுகள் மூலமாக கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். தங்களது குடியிருப்பில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் உள்ள நிலையில், மருத்துவமனையின் செயலால் அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தபோது, இதுதொடர்பாக உங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என பொறுப்பற்ற பதில்களே வருவதாக கூறுகின்றனர்.
இதனிடையே, மருத்துவமனை வளாகத்திற்குள் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இருந்தும், அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களின் வாகனங்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், மருத்துவமனைக்கு வருபவர்களின் வாகனங்கள் சாலைகள் மற்றும் தங்களது குடியிருப்பின் முன்பகுதியை முழுவதையும் ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனை செயல் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் முதலமைச்சர் கட்டுப்பாட்டு அறை என பல தரப்பில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், தனியார் மருத்துவமனைகளின் உரிய ஒத்துழைப்பின்றி அதனை நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமற்றது ஆகும். சிகிச்சை எனும் பெயரில் லட்சங்களை கொள்ளையடித்துக் கொண்டு, கழிவுகளைக் கூட முறையாக அப்புறப்படுத்தாத தனியார் மருத்துவமனைகளின் மீது, அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.




