சென்னையில் ரூபாய் 5 மட்டுமே கட்டணமாக வசூலித்துவந்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரூபாய் 5 மட்டுமே மக்களிடம் கட்டணமாக வசூலித்து, சிகிச்சை அளித்து வந்தவர் மருத்துவர் திருவேங்கடம். இதனால், இவர் மீது மக்களுக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த இவர் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற திருவேங்கடம் இலவசமாக மருத்துவம் படித்ததாகவும், அதே போன்று தனது சேவையும் இருக்க வேண்டும் என நினைத்து, வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவச் சேவை அளித்திட வேண்டுமென்ற உயரிய நோக்கில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு 2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்தார். பல ஆண்டுகளுக்கு பின்னர், 5 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு தனது இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர்.
முதல்வர் இரங்கல்
தன்னுடைய சிறு வயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும், மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்து மருத்துவரான மருத்துவர் திருவேங்கடம், 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கியுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாகப் பெற்று வந்த வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரி பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.