
ஏப்ரல் 1-ம் தேதியை முன்னிறுத்தி சுங்கக் கட்டணம் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்ற அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைந்து, ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய நிதியாண்டு துவங்கும். அந்த வகையில் நடப்பாண்டில் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு என்னென்ன மாற்றம் நடக்குமோ என பொதுமக்கள் பலரும் கலக்கத்தில் இருந்தனர்.
5 மாநில தேர்தல்களை மனதில் வைத்து, மத்திய அரசு எரிவாயு பயன்பாடு, எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட பொருட்களின் விலையை மாற்றாமல் இருந்தது. அதனால் ஏப்ரல் பிறந்தவுடன் கடுமையான விலையேற்றம் இருக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதன்படி, பால், பிஸ்கெட், சோப்பு, முட்டை, பெட்ரோல், டீசல், மருந்து மாத்திரைகள், டோல்கேட் கட்டணம் என ஒவ்வொருன்றும் விலையேற்றத்தை கண்டுள்ளது. அந்த வகையில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 268.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 2406-ஆக உள்ளது.
அண்மையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 965.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. புள்ளிவிவரங்களுடன் பார்த்தால் கடந்த 15 மாதங்களில் சமையல் எரிவாயு ரூ.257 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் உயரலாம் என பொருளாதர நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




