சென்னை மாநகராட்சியில் நோய்த் தொற்று ஒழிப்பு பணியில் ஈடுபட்ட, தலைமை என்ஜினீயர் உட்பட 35 என்ஜினீயர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிற சூழலில், நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 5,881 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,013 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 99 ஆயிரத்து 794 ஆக அதிகரித்தது.
மேலும் நேற்று கொரோனாவுக்கு சென்னையைச் சேர்ந்த 21 பேர் உட்பட 97 பேர் பலி ஆனார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சென்னையில் 2,113 ஆகவும், தமிழ்நாட்டில் 3,935 ஆகவும் உயர்ந்தது.
சென்னை நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வார்டிலும், மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று உடல் வெப்ப பரிசோதனை நடத்தி வருகிறார்கள். நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
கெரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளை தனிமைப்படுத்தி நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கிறார்கள். கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாநகராட்சியில் என்ஜினீயர்களாக பணியாற்றும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களில் தலைமை என்ஜினீயர் நந்தகுமாரும் ஒருவர் ஆவார். நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்ற என்ஜினீயர்கள் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஊழியர்கள் மற்றும் என்ஜினீயர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நோய்த் தொற்றுக்கு ஆளான போதிலும், கொரோனா ஒழிப்பு பணியை மாநகராட்சி தொய்வின்றி மேற்கொண்டு வருகிறது.