டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தை, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிககளில் ஒருவரும், சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கு.க.செல்வம் நேற்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார். பின்னர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றும், தலைமை தன்மீது நடவடிக்கை எடுத்தால் சந்திக்கத் தயார் என்றும் பேட்டியளித்தார்.
அவரது இந்த நடவடிக்கை, தி.மு.க. மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, நேற்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், தி.மு.க. தலைமை கழகம் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.