வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை, அமலக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் புகார் அளித்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, ஜெகத்ரட்சகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, அவரது மகன், மகள், உட்பட ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பியும் இதுவரை விசாரணைக்கு யாரும் ஆஜராக வில்லை என தெரிவித்தனர். அதற்கு ஜெகத்ரட்சகன் தரப்பில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டு நேற்று தான் வீடு திரும்பியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிபதி ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி முன்பு ஆஜராகி காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டு என உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜெகத்ரட்சகன் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகள் வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எம்பி ஜெகத்ரட்சகனின் 89.19 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி அதிரடியாக செயல்பட்டுள்ளது.
பண விவகாரத்தில் திமுகவின் முக்கிய புள்ளியாக கூறப்படுவது ஜெகத்ரட்சகன் தான். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பது திமுக கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.