நீலகிரி மாவட்டத்துக்குள் வருபவர்கள், கலெக்டரின் அனுமதியுடன், கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும், என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு அமலுக்கு வந்தவுடன், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, அங்குள்ள தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்ததையடுத்து, வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் பலர் சுற்றுலா நோக்கத்தோடு நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைக்கருத்தில் கொண்டு, நீலகிரிக்கு செல்ல, கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற அவசியக் காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநிலம் முழுவதும் இ-பாஸ் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் நீலகிரிக்குள் வருவதைத் தடுக்கும் வகையில், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்குள் வருவதற்கு, கலெக்டரின் அனுமதியுடன், கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று வருபவர்களை, நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில், தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறாமல் வந்தால் கண்டிப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால், நீலகிரியில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவை இல்லை.
இதுக்குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்துக்குள் சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும்விதமாக, பொது மக்களுக்கு அவசிய காரணங்களுக்கு மட்டும், கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் வழங்க அரசு அனுமதித்து உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு, கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.




