பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக, உயர்கல்வித்துறை கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தொடர்ந்து பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டரை தவிர்த்து மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.
அதைதொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு முறைகளிலும் மூலமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர்: வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் உள்ள மாணவர்களின் வசதிக்காக ஆன்லைன் தேர்வுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும்,
பிற மாணவர்களுக்கு ஆப்லைனில், எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்றார்.
மேலும், ஆன்லைன், ஆப்லைன் தேர்வு தொடர்பாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து கொள்ளலாம்,
தனிமைப்படுத்தல் முகாம்களாக செயல்படும் கல்லூரி கட்டிடங்களில் தேர்வுகளை நடத்தக் கூடாது என அறிவுறுத்தினார்.
பிற கல்லூரிகள், பள்ளிகளில் கூட தேர்வு மையம் அமைக்க அனுமதி வழங்கப்படும் எனவும், விரைவில் பல்கலைக்கழக, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.