டாஸ்மாக்’ கடைகளில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 250.25 கோடி ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயற்றுக் கிழமையும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அன்றைய தினங்களில் மதுக் கடைகள் செயல்படாததால், ஒவ்வொரு சனிக்கிழமையும் சராசரியாக, 180 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் தமிழகத்தில் விற்பனையாகின்றன. இந்நிலையில் 10வது ஞாயற்றுக் கிழமையாக, இன்றும் தமிகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 4,500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில், சென்னையிலும் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, நேற்று மட்டும், சுமார் 250.25 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் இரண்டு நாட்கள், விடுமுறை விடப்பட்டும் 248 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.