என் உயிருக்கு 2 நபர்களால் ஆபத்து உள்ளது என்று சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் புகார் தந்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் ஜெயராமன் மகள் தீபா, அரசியலில் களமிறங்கினார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட சிக்கல், பிரச்சினைகளால் அவர் அரசியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தற்போதைய நிலையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் ஜெ தீபா மற்றும் அவரது அண்ணன் ஜெ தீபக் ஆகியோர் தான் என சென்னை உயர்நீதிமன்றமே அறிவித்துவிட்டது. அவர்களுக்கு ஜெயலலிதாவின் சொத்துக்கள் திரும்ப அளிக்கப்பட உள்ளது. போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லாமாக மாறுவதால் அதற்கான தொகையும் இவர்களுக்குத்தான் வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜெ தீபா சென்னை போலீஸ் கமிஷனருக்கு வாட்ஸ் அப் ஆடியோ மூலம் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நான் அரசியலில் இருந்தபோது என்னை ஏமாற்றி ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது. எனக்கு அறிமுகமே இல்லாத ராஜா, ஈசிஆர் ராமச்சந்திரன் ஆகிய 2 நபர்கள் தங்களை வியாபாரிகள் என்று சொல்லிக் கொண்டு ஜெ.தீபா பேரவை சார்பில் அறிமுகமாயினர். எனக்கு இவர்களால் ஆபத்து ஏற்பட்ட போது, இவர்கள் மீது பலமுறை நான் புகார் அளித்தும் போலீஸார் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.ஈசிஆர். ராமச்சந்திரன் மற்றும் ராஜா என்ற இந்த 2 பேரும் பலரிடம் பணம் வசூல் செய்து அதை எண்ணிடம் கொடுத்ததாக கூறி வருகிறார்கள்.
எனது உயிருக்கும், உடமைக்கும், எனது கணவருக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த 2 பேரும் வீடு புகுந்து மிரட்டினர். இவர்கள் இருவரும் என்னை பின்தொடர்ந்து வருகிறார்கள். இதனால், நான் அச்சம் அடைந்துள்ளேன். எனது உடல்நிலை தற்போது பாதிப்படைந்திருக்கிறது-. எனக்கு மன உளைச்சலும், ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே, காவல் ஆணையர் இந்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். ஜெ. தீபாவின் இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




