கடன் தொல்லையால் கடனை அடைப்பதற்கு மூதாட்டியின் முகத்தை துணியால் மூடி நகையை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி.நகர், சேனியம்மன் கோவில் 5வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் 82 வயதுடைய மூதாட்டி ராதா. இவர் நேற்று மாலை குளித்து விட்டு தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, வீடு வாடகைக்கு உள்ளதா என கேட்டு, பெண் ஒருவர் ராதாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர் வீடு காலியாக இருப்பதாக கூறி வீட்டைக் காட்ட உள்ளேஅழைத்துச் சென்றுள்ளார். பின் திடீரென அந்த பெண் ராதாவை கீழே தள்ளி முகத்தை துணியால் கட்டி அவரது கழுத்தில் இருந்த மூன்று சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். கீழே விழுந்ததில் மயக்கமடைந்த ராதாவை அருகில் இருந்தோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த ராதாவின் மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இன்று காலை ராதா வீட்டிற்கு அருகே சந்தேகத்திற்கிடமாக பெண் ஒருவர் நடந்து சென்றதை பார்த்த ராதாவின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருங்கள் என்று கூறினர். பின்னர், அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த பெண்மணியை கைது செய்து விசாரணை செய்த போது அவர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வேளாங்கண்ணி(44) என்பதும், சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர் கடன் தொல்லையால் கும்மிடிப்பூண்டியில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு வீடு குடி வந்ததாகவும்,திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், திருடிய மூன்று சவரன் நகையை காசிமேட்டில் உள்ள அடகு கடையில் அடமானம் வைத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று, கடனை அடைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் வேளாங்கண்ணியை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-பா.ஈ.பரசுராமன்.