சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து உரையாற்றினார்.
முதலமைச்சர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹18 ஆயிரத்தில் இருந்து ₹20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.சுதந்திர போராட்ட வீரர்களின் வழித்தோன்றலுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹9,000 இருந்து ₹10,000 ஆக உயர்த்தப்படுகிறது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31% இருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
கடந்த ஓராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும். ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது. அனைத்து காரியங்களையும் கண்னும் கருத்துமாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.