வாழப்பாடி அருகே ₹25 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்மகும்பல் திருடிச் சென்றது.

தமிழகம் முழுவதும் ஏராளமான செல்போன் டவர்களை மர்ம கும்பல் திருடியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் செல்போன் செயல்பாட்டிற்கு அனைத்து பகுதிகளிலும் செல்போன் டவர்களை தனியார் நிறுவனங்கள் அமைத்தன. தமிழகத்தின் பல்வேறு தனியார் செல்போன் நிறுவனங்கள் அமைத்த, 100க்கும் மேற்பட்ட டவர்கள் தற்போது செயல்பாடற்று காணப்படுகின்றன. இந்தநிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்புள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு செல்போன் டவரை, மர்ம கும்பல், போலி ஆவணங்களை காண்பித்து கடந்த ஜூலை மாத இறுதியில் ராட்சத கிரேன்களை கொண்டு திருடிச் சென்று விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சென்னை தனியார் நிறுவனம், தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான டவர் மாயமானதாகவும், டவரை திருடிச்சென்ற மர்ம கும்பலை கண்டறிந்து டவரை மீட்டு கொடுக்க வேண்டுமெனவும் வாழப்பாடி போலீசில் புகார் கொடுத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உள்ளூர் புள்ளிகளின் உதவியுடன் செல்போன் டவரை மர்மகும்பல் திருடியதாக தெரியவந்துள்ளது. மேலும், தனிப்படை அமைத்து விசாரித்தால் தமிழகம் முழுவதும் காணாமல் போன பலகோடி ரூபாய் மதிப்பிலான செல்போன் டவர்கள் பற்றிய உண்மை தெரியவரும் என்று டவர் அமைக்க நிலத்தை குத்தகைக்கு விட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.




