தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் இன்று 36வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று சுமார் 50 ஆயிரம் இடங்களில் இலவச தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் இந்த முகாம்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.
இந்த இலவச தடுப்பூசிகளை செலுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனில் ₹386.25 கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, பொதுமக்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.