உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாலியல் வன்கொடுமை:
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது தலித் பெண் கடந்த செப்டம்பர் 14 ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கும் அறுக்கப்பட்டு, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
உயிருக்குப் போராடிய அந்த பெண் கடந்த செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடிய சம்பவம் கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமானமற்ற செயல்:
இறந்த பெண்ணின் உடலை டெல்லி மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு உத்தரப்பிரதேச காவல் துறையினர் வலுக்கட்டாயமாக எடுத்துச்சென்று நள்ளிரவு இரண்டரை மணியளவில் அவரது கிராமத்தில் தகனம் செய்துள்ளனர். இதைவிட ஒரு அப்பட்டமான மனிதாபிமானமற்ற மனித உரிமை மீறல் வேறு எதுவும் இருக்க முடியாது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தலித்துகள் மீதான குற்றங்கள் 7 சதவீதமும், பழங்குடி மக்கள் மீதான குற்றங்கள் 26 சதவீதமும், 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
பாரபட்சமற்ற விசாரணை:
இத்தகைய குற்றங்கள் உத்தப்ரபிரதேசத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலித் விரோத போக்குதான் காரணம்.
தற்போது நடந்துள்ள இப்படுகொலை குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர உத்தரப்பிரதேச மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.