கிசான் எனப்படும் பிரதமரின் உழவர் உதவித் தொகை திட்டத்தில் 110 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக, வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆண்டிற்கு மூன்று தவனையாக, ஆறாயிரம் ரூபாய் வழங்கும் கிசான் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இத்திட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் பயனாளர்கள் அற்றவரும் , உதவித்தொகையை பெற்று வருவதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் மட்டுமே, போலி ஆவணங்கள் மூலம் உதவித்தொகை பெற்ற சுமார் 14 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. கடலூரில் சுமார் 4 கோடி ரூபாய், போலி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து மீட்கப்பட, மதுரையிலும் சுமார் 6 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை வேளாண் முதன்மைச் செயலாளர் சந்தித்த ககன் தீப் சிங் பேடி, கிசான் திட்டத்தில் விவசாயிகள் தாங்களாகவே இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனும் வசதி உள்ள நிலையில்,
விவசாயிகளின் தகவலைப் பெற்று, தனியார் கணினி மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன என்றார்.
இந்த மோசடி தொடர்பாக 3 உயரதிகாரிகள் உள்ளிட்ட 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு நிலைகளில் இதுவரை 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
கிசான் திட்டத்தில் தமிழகத்தில் சுமார் ரூ.110 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கூறிய அவர், இதுவரை 32 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது என்றும், முறைகேடாக பெறப்பட்ட ஊக்கத் தொகை 45 நாட்களில் முழுவதுமாக மீட்டுகப்படும் என்றார்.
கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என சிபிசிஐடி கைகாட்டும் அதிகாரிகள் மீது தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த ககன்தீப் சிங், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.