இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கருணாநிதியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இயற்கையின் சதி பிரித்து, ஆகஸ்ட் 7-ஆம் நாளுடன் இரண்டு ஆண்டுகளானாலும், நம் இதயத்திலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொரு உடன்பிறப்புக்குள்ளும் கருணாநிதி கலந்திருக்கிறார். அவர் தமிழக மக்களின் எண்ணங்களில் தன்னிகரற்ற தமிழாக வாழும் தலைவர். சமூகத்தில் எவரெல்லாம் புறக்கணிக்கப்பட்டார்களோ, அவர்களையெல்லாம் ஏற்றம் பெறச் செய்த மாண்பாளர். கருணாநிதி மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் அயராமல் போராடினார்.
இன்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மதச்சார்பற்ற கொள்கை மீது மதவெறி ஆயுதங்கள் பாய்ந்து மதநல்லிணக்கத்தை வெட்டுகின்றன. எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், உதவிகள் உள்ளிட்ட சோசலிச அடிப்படையிலான செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, எதேச்சதிகாரப் போக்கு ஆட்டம் போடுகிறது.
ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும் – நலன்களைக் காக்கவும், முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார் கருணாநிதி. அவர்தான் இப்போதும் நம்மை வழிநடத்துகிறார். அவருடைய பேராற்றலில் ஒருசில துளிகளை நாம் பெற்றாலும் போதும். வேராற்றல் ஏதுமின்றி களம் காண முடியும்.
இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் கருணாநிதி எனும் மகத்தான ஆற்றல். கருணாநிதி வழங்கிய ஆற்றலை மக்களிடம் கொண்டு செல்வோம். அவர் படைத்த சாதனைகளையும், அதன் பயன்களையும் அவர்களிடம் சொல்வோம். ஜனநாயகத்தைப் பலிகொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம். நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் – திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம் என அவர் எழுதியுள்ளார்.