டிசம்பர் 27ந் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என, தென்மாநில லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வேலை நிறுத்தம் தொடர்பாக தென்மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகப்பா பேசியிருப்பதாவது: போக்குவரத்துத்துறையின் கெடுபிடிகளை கண்டித்து வருகின்ற டிசம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது என தெரிவித்துள்ளார்.
ஜி.பி.எஸ். வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார். கர்நாடகத்தில் ரூ.1,500-க்கு விற்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி தமிழகத்தில் ரூ.8,000 முதல் ரூ.10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் ரூ.600-க்கு விற்கப்படும் ஒளிரும் ஸ்டிக்கர், தமிழகத்தில் ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

மேலும், குறிப்பிட்ட 2 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கருவிகளை வாங்குமாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதன் மூலம், ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடக்கிறது. ஐ.எஸ்.ஐ. தரச்சான்று உள்ள 49 நிறுவனங்களிடம் வாங்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. மேலும், லாரி உரிமையாளர்களை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அதிகாரிகளும் மிரட்டி வருகின்றனர். இந்த ரூ.1,000 கோடி ஊழல் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும், லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.




