மின்சார ரயிலில் சென்றுகொண்டிருந்த பெண் பயணி, எண்ணூர் பாலத்தின் கீழே ஓடும் கொசஸ்தலை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருடைய மகள் துர்காதேவி (23) வீட்டுக்கு அருகேவுள்ள ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தையல் வேலை செய்து வந்துள்ளார். உடன் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவரை அவர் காதலித்துள்ளார்.
வீட்டில் திருமணம் செய்துகொள்ள நிர்பந்தம் கொடுத்ததை அடுத்து, காதலனிடம் திருமணம் செய்துகொள்ளலாம் என துர்காதேவி கூறியுள்ளார். ஆனால் பொருளாதார சூழலை காரணம் காட்டி இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ள முடியாது என இளைஞர் மறுத்துள்ளார்.
இதனால் காதலருக்குள் பிரச்னை உருவாகி இருவரும் பிரிந்துவிட்டனர். இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த துர்காதேவி, நேற்று மதியம் பொன்னேரியில் இருந்து சென்னைக்கு செல்ல மின்சார ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ரயில் எண்ணூர் பாலத்தில் சென்ற போது, வாசலில் நின்றுகொண்டிருந்த துர்காதேவி கீழே கொசஸ்தலை ஆற்றில் குதித்துவிட்டார்.
சக பயணிகள் அதிர்ச்சி அடைந்ததை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். மாலை 6 மணியளவில் துர்காதேவியின் சடலம் கரை ஒதுங்கியது. அதை கைப்பற்றிய காவல்துறை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக துர்காதேவி குடும்பத்தினர் மற்றும் அவர் காதலித்து வந்த நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.