கல்லூரி மாணவர்கள் நியாயமான முறையில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
கல்லூரி மாணவர்கள் நியாயமான முறையில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி:
அ.தி.மு.க. அரசு கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனில் அவசர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. ‘அரியர்ஸ்’ தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதற்குப் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் இடம் தராது எனக் கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துவந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா, அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் இதனை ஏற்கவில்லை எனத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது .
அமைச்சர் ஜெயக்குமார் அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் விதிமுறைப்படிதான் தேர்ச்சி பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலிடமிருந்து எந்தக் கடிதமும் அரசுக்கு வரவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குக் கடிதம் வந்திருந்தால், கவுன்சிலுக்கு அவர் என்ன பதில் கடிதம் எழுதுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்றும், தெரிவித்திருந்தார். அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பாவுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
கடிதம்:
அதில், இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் முந்தையப் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்குத் தேர்வின்றித் தேர்ச்சி என்கிற அறிவிப்பு ஆச்சரியமளிக்கிறது. தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அளிக்காமல் தேர்ச்சி என்பது ஏற்க இயலாதது. அத்தகைய மாணவர்கள், உயர் படிப்பில் மற்ற பல்கலைக்கழகங்களால் ஏற்கப்படமாட்டார்கள். தொழில்நிறுவனங்களும் அவர்களின் தகுதியை ஏற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை:
அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் இந்தக் கடிதம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து, அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் குறித்து கல்வியாளர்களிடம் உரிய ஆலோசனைகள் பெற்று – பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அரசு செயல்படுகிறதா, அல்லது சுயநலமான காரணங்களுக்காக, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க கபடநாடகம் ஆடுகிறதா என்ற பொருத்தமான கேள்வி எழுந்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்காமல், கல்லூரி மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, நியாயமான – தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.