தமிழகத்தில் கோயில்களை சுற்றியிருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் திருக்கோயில், கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் உலோகத் திருமேனி பாதுகாப்பு அறையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், உலோகத் திருமேனிகளை பாதுகாக்க மூன்றாயிரத்து 085 அறைகள் கட்டப்படும் என்றும், கோவிலைச் சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றின் தாக்கம் முழுமையாக முடிவுக்கு வந்த பிறகே, சுற்றுலாத்துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்த அமைச்சர், நிலங்கள் ஆக்கிரமிப்பில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குயின்ஸ்லாந்திடம் இருந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வடபழனி முருகன் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அண்ணாமலை மீது கைவைப்பேன் என்று நான் சொல்லவில்லை. அன்பால் கூட ஒருவர் மீது கைவைக்கலாம். நிலைதடுமாறும் போது கை கொடுத்து காப்பாற்றலாம். பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அண்ணாமலை அப்படி சொல்லியிருக்கிறார்.” என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.” என்றும் தெரிவித்துள்ளார்.