ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டாம்சென் நிறுவனம் வலிமை என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கிடுகிடுவென உயரும் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசின் டான்செம் நிறுவனம் வலிமை என்ற பெயரில் சிமெண்ட் தயாரிக்க உள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இந்நிலையில் வலிமை சிமெண்ட் எப்போதிலிருந்து விற்பனைக்கு வர உள்ளது என்பது குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தனியார் சிமெண்ட் விலை 2021 மார்ச் மாதம் 470 ரூபாய் முதல் 450 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து ஜூன் மாதம் முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 முதல் 490 வரை விற்கப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு அரசின் கவனத்திற்கு வந்தவுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிமெண்ட் விலையை குறைப்பது தொடர்பாக தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்கள் உடன் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் சிமெண்ட் விலை உயர்ந்துள்ளதால் கட்டுமான தொழிலுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படக்கூடிய இன்னல்களை குறிப்பிட்டு சிமெண்ட் விலையை குறைக்குமாறு தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சில்லரை விற்பனை விலையை மூட்டை ஒன்றுக்கு 20 முதல் 40 ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வினை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக சிமெண்ட் விலை 420 முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட் விலை 470 முதல் 490 வரை விற்கப்பட்டது. அரசு தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் தற்போது சிமெண்ட் விலை 420 முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் 33 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. தமிழக சிமெண்ட் கழகத்தில் சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வினியோகம் செய்ய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 3,67,677 மெகா டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் மார்ச் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது டான்செம் சிமெண்ட் 350 முதல் 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் விலையுடன் ஒப்பிடுகையில் 90 ரூபாய் குறைந்த விலையில் தரமான சிமெண்ட் அரசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்ற வருடம் 3.5 சதவீதமாக இருந்த டான்செம் விற்பனை பங்கு நடப்பாண்டில் 7.35 சதவீதமாக உயர்ந்து உள்ளது. எனவே டான்செம் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம் வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிறுவனம் மூலம் மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் மெகா டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் அரசு சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் குறைந்த விலையிலும் நிறைந்த தரத்திலும் வலிமை சிமெண்ட் முதல் கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் மெகா டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது இதன் மூலம் சிமெண்ட்டின் சில்லரை விற்பனை மேலும் குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




