எங்கள் தொகுதி எம். பி.யை காணவில்லை என்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட நபரை நேரில் சந்தித்த எம்.பி. யின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தென்காசி :
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள நயினாரகரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் தங்களது கிராமத்தில் பொது கழிவறையும் பேருந்து நிழற்குடையும் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்துள்ளார். மேலும், தென்காசி எம்.பி. தனுஷ்குமாரை காணவில்லை. அவரை எங்கையாவது, யாராவது பார்த்தால் வர சொல்லுங்க என்று தனது முகப்புத்தகத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். இதை அந்த பகுதி மக்கள் பலரும் ஷேர் செய்து வந்துள்ளனர்.
இந்த பதிவை எதார்த்தமாக கண்ட தனுஷ்குமார் எம்.பி., நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று சரவணனை சந்தித்து ஆச்சர்ய படுத்தியுள்ளார். தொடர்ந்து சொல்லுங்கள் எதற்கு என்னை தேடினீர்கள். உங்களது கோரிக்கை என்ன என்றும் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் தங்கள் கிராமத்திற்கு பொது கழிவறையும் பேருந்து நிழற்குடையும் வேண்டும் இதை பலமுறை கோரிக்கையாக வைத்தும் நீங்கள் யாரும் கேட்கவில்லை. அதனால் தான் முகப்புத்தகத்தில் அப்படி பதிவு செய்தேன் என்று தெரிவித்தார்.
Read more – பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அத்தனையும் பொறுமையாக கேட்ட தனுஷ்குமார் சரவணனுக்கு தனது பதிலை அளித்தார். அதில், கொரோனா காரணமாக தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. நிதி வந்ததும் உங்கள் ஊருக்கு பொதுகழிப்பிடமும், பேருந்து நிழற்குடையும் அமைத்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.