நீட் மற்றும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு:
நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த மாதம் நடத்தப்படும் என்பது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. இந்தியாவில் இப்போது தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தொட்டுவிட்டது. 140 பேர் பாதிக்கப்பட்ட போதும், 3975 பேர் பாதிக்கப்பட்ட போதும், 20,903 பேர் பாதிக்கப்பட்ட போதும் நடத்த முடியாத நீட் தேர்வை, தினசரி 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் போது மத்திய அரசு எவ்வாறு பாதுகாப்பாக நடத்தும்?
இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேரும், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள தேர்வு மையங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, போதிய இடைவெளி விட்டு, இவ்வளவு பேரையும் பாதுகாப்பாக அமர்த்தி நுழைவுத்தேர்வு எழுத வைப்பது சாத்தியமே இல்லை.
ரத்து செய்ய வேண்டும்:
பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் கல்வியை விட உயிர் முக்கியம். அதனால் தான் ஏராளமான பெற்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விஷயத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் உணர்வுகளை புரிந்து, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, நெருக்கடியான இந்நேரத்தில் அவர்களின் அச்சத்தைப் போக்கி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவது தான் அரசின் வெற்றி ஆகும். எனவே, இந்த விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டாமல் நீட் தேர்வையும், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வையும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.