இனி நடைபெறும் TNPSC தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாட தாள் இடம்பெறும் என்று TNPSC அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 30க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, தேர்வில் வெற்றி பெறுவோரை கொண்டும்காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் படி, தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வுக்கு முன் தமிழ் பாடத்தாள் தகுதி தேர்வை நடத்த டிஎன்பிஎஸ்சி பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சட்டப்பேரவையில் தமிழகத்தில் அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.




