நிவர் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நிவர் புயல் தற்போது வட தமிழகக் கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கு வடக்கு- வடமேற்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு மேற்கு – தென்மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 6 மணி நேரத்தில் மாறக்கூடும்.
அதற்கடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுகுறைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக, தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 70லிருந்து 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கனமழை
இன்று மாலை காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து காற்று மணிக்கு 50 இருந்து 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்று வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.