மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் பெய்த கனமழை காரணமாக பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கி வெடித்து வீணாகின.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பணப்பயிராக கருதப்படும் பருத்தி சாகுபடியை இந்த ஆண்டு விவசாயிகள் ஆர்வமுடன் செய்திருந்தனர். மேலும் கடந்த ஒரு மாதமாக பருத்தியை அறுவடை செய்து விற்பனை செய்தும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கன மழை பெய்ததால் ஒருபுறம் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீர் முழ்கின. அதேபோன்று அறுவடைக்கு தயாரான பருத்திகளும் கன மழையினால் செடிகளில் வெடித்து இருந்த பஞ்சுகள் நனைந்து கருகுவதால் அதனை அறுவடை செய்தாலும் விற்பனை செய்யமுடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது அதிக மகசூல் கிடைத்தும் மழையினால் பருத்தி பஞ்சுகள் சேதமடைந்துள்ளதால் தாங்கள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகி இருப்பதாக கவலை தெரிவிக்கும் பருத்தி விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பிற்கு ஏற்றவாறு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.