மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் 16 ஆயிரம் பேர் போலியாக சேர்ந்து மோசடி செய்துள்ளதை தொடர்ந்து அதில் 6 ஆயிரம் பேர் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மதுரை:
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 48 லட்சம் பேர் பதிவு செய்து பயன் அடைந்து வருகின்றனர். இதனையடுத்து இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாதவர்களும் பதிவு செய்து நிதி உதவி பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் மதுரையிலும் மோசடி நடந்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது .விவசாயிகள் அல்லாதவர்கள், ஒரே குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன், மருமகள் என 4 பேரும் நிதி உதவி பெறுவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் உண்மை தன்மையை கண்டறியும்படி கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தற்போது வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் 16 ஆயிரம் பேர் போலி கணக்கு மூலம் நிதி உதவி பெற்று இருப்பதும் இதில் 6 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.70 லட்சம் வரை திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.மேலும் இவர்களது வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.




