தூத்துக்குடி மாவட்டத்தில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டபோது, நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் சிக்கி காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உயிரிழந்த சுப்பிரமணியத்தின் உடலுக்கு அவரின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.அவரின் இறுதி ஊர்வலத்திலும் அப்பகுதியிலுள்ள மக்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், காவலர் சுப்பிரமணியனின் உடலை டி.ஜி.பி. திரிபாதி, தென் மண்டல ஐ.ஜி. முருகன், டி.ஐ.ஜி. பிரவின் குமார் அபினவ், தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், திருநெல்வேலி எஸ்.பி. மணிவண்ணன் மற்றும் இதர காவலர்கள் தோலில் சுமந்தபடி எடுத்து சென்றனர்.
காவலர் சுப்பிரமணியத்தி உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, டி.ஜி.பி. திரிபாதி, டி.ஐ.ஜி. பிரவின் குமார் அபினவ் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய நிலையில், 21 குண்டுகள் முழங்க அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும், உயிரிழந்த சுப்ரமணியனின் மனைவிக்கு தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆறுதல் கூறினார்.