தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கும் நடைமுறையை, தமிழக அரசே மேற்கொள்வது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதேசமயம், ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை கண்காணிக்காததால், 50 சதவிகித லாபம், பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர்களின் கைகளுக்கு செல்வதாகவும், தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்த கட்டணச்சலுகையும் வழங்கப்படுவதில்லை.
தற்போது, தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், டீ கடை நடத்துவது, பூ விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், கட்டண வசூல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கும் நடைமுறையை அரசே ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, கட்டண வசூல் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கும் நடைமுறையை அரசே ஏற்பது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.