புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும், மாணாக்கர்கள் தேர்வு அறைக்கு புத்தகங்களை கொண்டு வந்து தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் நடக்க இருந்த புதுச்சேரி பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ந்து, இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, இதர அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது குறித்து புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “மாணவர்களுக்கு நியாயமான தேர்வை உறுதி செய்யும் விதமாக இறுதி செமஸ்டர் தேர்வுகள் எழுத ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் இரண்டும் கலந்த வகையில் மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின்படி திறந்த புத்தக தேர்வு (Open Book Examination) முறையைப் பயன்படுத்தி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களின் தேர்வைப் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களைப் பார்த்துத் தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.