சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1940 இல் பிறந்தவர் கந்தசாமி. இவர் 1968 இல் எழுதிய சாயாவனம் என்ற நாவல் அவருக்கான தனி அடையாளத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. மேலும் இந்த நாவல் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு எழுத்தாளர் கந்தசாமி விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை பெற்றார். மேலும் இவரின் நிகழ் காலத்திற்கு முன்பு எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் வெற்றி பெற்றது.
சாகித்ய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்த இவர் இந்தியத் திரைப்படத்துறையில் தணிக்கை குழுவிடம் 10 ஆண்டுகளாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது
அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.