பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை திட்டத்தில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என, சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் பிரதமரின் நலிவடைந்த விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை திட்டத்தில், முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து, வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட 110 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்ப்பதை நிறுத்தி வைக்கும்படி வேளாண்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரை மாவட்ட அளவில் சேர்க்கை நடைபெற்று வந்தது நிறுத்தப்பட்டு இனி மாநில அளவில் பயனாளிகள் சேர்க்கை நடைபெறும் என வேளாண் துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, முறைகேடுகளில் ஈடுபட்தவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப் பெறும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இதுவரையில் 32 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதம் இருக்கக்கூடிய தொகையை இன்னும் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்தில் திரும்ப பெறப்படும் என்று வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 14ம் தேதி மாலைக்குள் பணத்தை திருப்பி செலுத்தாவிடில் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடாக பணம் பெற்றவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக சேலத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி மாலைக்குள் பணத்தை செலுத்தி உரிய ஆவணம் பெறவேண்டும் என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.