நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்குப் பிறகும், கல்விச்சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்ததால், விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் நர்ஸிங் மாணவி. ஆபத்தான நிலையில் இருக்கும் மாணவிக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு, ஆயவிளை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது 20 வயது மகள் வேதிகா. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.ஸி. நர்ஸிங் படித்து வந்த வேதிகாவுக்கு, தேர்வு நேரத்தில் ஜாதி சான்றிதழ் கிடைக்காததால், தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளானார்.
அதன் பின்னர், கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்ஸிங் சேர்ந்து பயின்றார். இது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார் மாணவி வேதிகா. மாணவிக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், கிராம நிர்வாக அதிகாரி எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், ஜாதிச் சான்று கிடைக்காமல் மாணவி அவதிக்குள்ளாகியுள்ளார்.
இந்த நேரத்தில், ஆட்டோ ஓட்டுநரான இவரது தந்தையும் விபத்து ஒன்றில் உயிரிழந்து விட, மனம் தளராத வேதிகா தனது தாயுடன் பல அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி, எப்படியாவது சான்றிதழ்களை வாங்க முயன்றுள்ளார். எந்த முயற்சிக்கும் பயன் கிடைக்காத நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்த வேதிகா, பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற வேதிகா, தற்போது மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி முறையாக சான்றிதழ் வழங்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவியின் சொந்த ஊரான ஆயவிளை கிராம மக்கள் மருத்துவமனையின் முன் குவிந்தனர். எனவே, ஆயவிளை கிராமம் மற்றும் மருத்துவமனை பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.