நெல்லை ரயில் நிலையத்தில், ரயில் என்ஜின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற மாணவன், உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூற்று பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது 14 வயது மகன் ஞானேஸ்வரன், அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். மகேஷ்குமார், நுகர்பொருள் வாணிப கழகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கொரோனா நாட்களில் பள்ளி விடுமுறையின் காரணமாக, இன்று காலை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தனது மகன் ஞானேஸ்வரனை அழைத்து சென்றுள்ளார், மகேஷ்குமார்.
அலுவலகத்தின் அருகே ரயில் நிலையம் இருப்பதால், ஞானேஸ்வரன் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு ரயில் என்ஜின் மீது ஏறியுள்ளான். அங்கு நின்று ஞானேஸ்வரன் செல்ஃபி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக, மின்சார ஒயரில் இருந்து உயர் மின்னழுத்த மின்சாரம் ஞானேஸ்வரன் மீது பாய்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், மாணவர் உடல்கருகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுக்குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படையினர், மாணவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகுந்தப் பாதுகாப்பான பகுதிக்குள் மாணவன் எவ்வாறு நுழைந்தான் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், மாணவர் செல்பி எடுக்கும் நோக்கத்தோடுதான் ரயில் இன்ஜின் மீது ஏறினானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்து 9-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




