சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தமிழக அரசு தற்போது கட்டணத்தை நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டது.
அதன்படி, தற்போது ஆண்டுக் கட்டணமாக எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610க்கும், பி.டி.எஸ் படிப்புக்கு ரூ.11,610ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணத்தை ரூ.30 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ. 20 ஆயிரம் எனவும், பி.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3 ஆயிரம் எனவும், எம்.எஸ்.சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.5 ஆயிரம் எனவும் அரசு நிர்ணயித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.




