என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு” என்று மறைந்த தனது மகன் அன்பழகன் குறித்து சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான மா. சுப்பிரமணியனின் 34 வயதான மகன் அன்பழகன், அக்டோபர் 17-ஆம் தேதி அன்று உடல்நலக் குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார்.
மா. சுப்பிரமணியன் கடந்த மாதம் 28-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரது மனைவிக்கும், மகன் அன்பழகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் லேசான அறிகுறி இருந்ததால், இருவரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
ஆனால், மாற்றுத்திறனாளியான அன்பழகன் அதிகம் பாதிக்கப்பட்டக் காரணத்தால், சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்குக் கொரோனா நெகட்டிவ் என வந்ததால் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், தொற்று பாதிப்பின் பின்விளைவு காரணமாக உடல்நலம் குன்றிய அன்பழகன், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 17-ஆம் தேதி அன்று திடீரென்று மரணம் அடைந்தார்.
இதனிடையே, மா. சுப்பிரமணியன் தற்போது தனது மகன் மறைவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு, “கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பைப் போக்கிய அருமருந்து என் “அன்பு” ‘, என அவர் உருக்கமாகத் பதிவிட்டுள்ளார்.




