தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று, உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கிராமப்புற ஊரக தேர்தல் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஒன்றை விசாரித்த நீதிமன்றம், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தலை நடத்தவும், புதியதாக உருவக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு அடுத்த 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து அதற்கும் தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்கானிக்கும் என கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தது.
அதில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்கி நீட்டிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமனியன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில், தமிழகத்தில் நிலுவையில் இருக்கும், அதாவது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரை கிட்டதட்ட முடிந்த நிலையில் உள்ளது. இதில் கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தும் சூழலும் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தவிர வாக்கு இயந்திரங்களும் போதுமானதாக உடனடியாக வழங்க முடியாது என்பதால் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என வாதிட்டார். மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் என தெரிய வந்துள்ளது.