சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி, கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதி மக்கள் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதைதொடந்து, அதே ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 18-ஆம் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ஆலை மூடப்பட்டுள்ளதால் பராமரிப்பிற்காக இடைக்கால அனுமதி வழங்க வேண்டும், ஆலை மூடலுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. இந்த மனு, நீதிபதிகள் ரோஹிங்டன் நாரிமன், இந்திரா பானர்ஜி, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி காட்சி வாயிலாக இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.